பெண்களுக்கு தாய்மை என்பது வரம். ஒவ்வொரு பெண்ணுக்கும் அளவில்லாத மகிழ்ச்சியை கொடுக்கும் இந்த காலம் சில சமயம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.குடும்ப சூழ்நிலை அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சினையால் இந்த மன அழுத்தம் ஏற்படும்.இதை ப்ரிபார்டம் டிப்ரஷன் (Prepartum Depression) என் அழைப்பர். உலகளவில் 20% கர்ப்பிணிகள் இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்!
உடல் சோர்வு,பதற்றம்,கவனக்குறைவு,தேவை இல்லாத பயம்,எதிலும் விருப்பம் இல்லது இருப்பது,அதிகமாக எரிச்சலடைவது,தூக்கமின்மை,குற்றவுணர்ச்சி,சோகமாக இருப்பது,அதிக எடை அதிகரிப்பு அல்லது குறைவு,உணவு சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிக உணவு சாப்பிடுதல் போன்ற பல அறிகுறிகள் ஏற்படும்.சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் கூட தோன்றலாம். நம் நாட்டில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இந்த மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மிக குறைவு.அதனால் பல பெண்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளை பெரிதாக கவனிப்பதில்லை.இது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.எனவே மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்தினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்தில் இருப்பவர்களுடன் கர்ப்பிணி பெண்கள் மனம் விட்டு பேச வேண்டும்.தங்களுக்கு உள்ள பயத்தை பற்றி பேசி தெளிவு பெற வேண்டும்.இதற்கு குடும்பத்தாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வீட்டில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும்.வழிப்பாட்டு தலங்கள்,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு செல்லலாம்.தேவைப்பட்டால் மனநல ஆலோசகரிடம் செல்லலாம்.
இந்த மன அழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் குழந்தை பிறந்த பின்பும் தாய்மார்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.இது குழந்தை வளர்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்தும் மகிழ்ச்சியான சூழலும் கண்டிப்பாக தேவை என்பதால்தான் நம் நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கம் பல நூற்றாண்டாக பின்பற்றப்படுகிறது.சொந்தங்கள் சூழ அழகான வண்ண வண்ண வளையல்கள் அணிவித்து விதவிதமாக உணவுகள் பரிமாறி தாய்மை அடைய போகும் பெண்ணை கொண்டாடும் வழக்கம் நம் பண்பாட்டில் இருந்து வருவதற்கான காரணமா அது தான். இவ்வாறு செய்யும் போது அந்த பெண் மனதளவில் மகிழ்ச்சியும் தைரியமும் அடைவாள். ஆனால் இந்த பரபரப்பு உலகத்தில் அதுவும் குறைந்து விட்டது. அதுவும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்ட்ரெஸ்க்கு அளவிருக்காது. தாயின் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கருவில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு கவசம் போன்றது.