பெண்கள் நாட்டின் கண்கள் எனக் கூறி கூறியே அந்த கண்ணிலே குத்தி கொண்டு இருக்கிறது இந்த சமூகம். சொத்து உரிமை, கல்வி உரிமை எல்லா துறைகளிலும் இன்று பெண் கால்தடம் பதித்து சாதிக்கும் வாய்ப்பையும் இந்த சமூகம் தானே தந்தது என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வளவும் தந்து பெண்கள் எங்கள் கண்கள் என மார்த்தட்டிக் கொள்ளும் என் சமுகமே…….இதை எல்லாம் தந்து விட்டு இவற்றை அனுபவிக்க கொஞ்சம் சுதந்திரம் தந்துள்ளதா??… அதுவும் வேண்டாம் ஒரு பெண் பிறந்து இறக்கும் வரை எந்த தடையும் தடங்கலும் இன்றி நிம்மதியாக வாழ வழி இருக்கிறதா இந்த சமூகத்தில்??…இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று நீண்ட நாள் மனதில் நினைத்து இருக்கிறேன். உண்மையை சொன்னால் பல பெண்களின் மனதிலும் இதே கேள்வி இருக்கும் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த பதிவை வாசிக்க ஆரம்பிக்கும் போது சிலருக்கு கோபம் வரலாம். இவ்வளவு உரிமைகள் வழங்கி, எத்தனையோ சலுகைகள் செய்து தர பட்டும் இன்னும் என்ன வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று எரிச்சல் அடையலாம். ஆனால் தினமும் ஊடகங்களில் வரும் செய்திகள் என் கேள்வி நியாயமானது தான் என்று உணர்த்துகிறது.
வயசு பொண்ணு கற்பழிக்கப்பட்ட போது பொண்ணுங்களோட உடைகளை குறை சொன்னாங்க. அப்போ இந்த வயசான பெண்களையும் இந்த உலகத்தை இன்னும் சரியாக புரிஞ்சிக்காத பச்சை பிள்ளைகளை கற்பழித்து கொல்லும் கொடூரத்தை என்ன சொல்லுறது.. அவங்க உடையா இவங்க மரணத்துக்கு காரணம்?? சமீபத்தில் அதாவது கடந்த வியாழக்கிழமை வெறும் ஏழு வயது சிறுமி ஜெயப்பிரியா கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருந்தாள்.எத்தனை ஜெயப்ரியாக்கள், வித்யாக்கள், நிர்பாயாக்கள், ப்ரியதர்ஷினிகள் இன்னும் எத்தனை பெயர் தெரியாத வெளியில் சொல்லப்படாத நாம் அறியாத பெண்கள் பெண் குழந்தைகள் இந்த மனித உருவத்தில் இருக்கும் காமமிருகங்களின் வெறிக்கு இரையாகியுள்ளனர்.
எங்கள் உடைகளால் ஆண்களின் மனம் தடுமாறுகிறது என்று சொன்னது சமூகம் அதை மாற்றி கொண்டோம், நாங்கள் சகஜமாக பழகுவதால் பிரச்சினை வருகிறது என்றது சமூகம் அதையும் மாற்றி கொள்கிறோம், நாங்கள் பிறப்பதே தவறு என்பதை இப்போது உணர்ந்து கொண்டோம்….. முன்னர் ஒரு காலம் இருந்தது பெண் பிள்ளைகள் பிறந்தால் கள்ளி பால் கொடுத்து கொலை செய்வது என்ற வழக்கம், அது தவறு என்று பலர் எதிர்த்து அந்த வழக்கம் பெரும்பாலும் கை விடப்பட்டுள்ளது. ஆனால் காமப்பிசாசுகளின் கையில் கசங்கி சாவதை விட கள்ளி பால் கடித்து பெற்றவர்கள் கையில் சாவது எவ்வளவோ சிறந்தது அல்லவா??
கொடூரமான தண்டனைகள் கொடுத்தால் தீரும் இந்த சோகம் என்றது சமூகம் அப்படியான தண்டனைகள் வழங்க படும் நாடுகளில் கூட இன்னும் இந்த கொடூரங்கள் நடந்த வண்ணமே உள்ளது. அயல் நாடுகளில் அவ்வப்போது வழங்கப்படும் தண்டனைகள் பாடமாக அமைத்து இருந்தால் நம் நாடுகளில் பெண் குழந்தைகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என பெண் இனம் பாதுகாப்பாக இருக்கும் அல்லவா? ஆனால் அப்படி நடக்கிறதா இல்லையே…. மாறாக நாளுக்கு நாள் நாளுக்கு நாள் அநியாயங்கள் அதிகமாகி கொண்டு அல்லவா இருக்கிறது?? பஸ்சில் கற்பழிப்பு காட்டில் கற்பழிப்பு வீட்டுக்கு அருகிலே கற்பழிப்பு படிக்கச் சென்ற இடத்தில வேளைக்கு சென்ற இடத்தில் என நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் வெறி பிடித்த மிருகங்களின் வீட்டிலும் அம்மா அக்கா தங்கை மனைவி மகள் என்று யாரோ ஒரு பெண் இருக்க தான் செய்வாள். அதை மறந்து வெறும் உடல் பசிக்கு எங்கள் உணர்வுகளை கொன்று உயிரை பறித்து விடுகிறார்கள். இந்தியாவின் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அப்போது பேசுபொருளாக இருந்தது, அது அப்படியே கிடப்பில் போட்டு அடுத்த வேளைக்கு போய்விட்டார்கள் அனைவரும்….. எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருந்தார்கள்…. யார் என்று தெரிந்தும் தண்டனை முழுமையாக வழங்கப்பட்டதா? வெளி உலகுக்கு தெரியாமல் கூட எத்தனையோ பெண்களின் வாழ்க்கை நரகமாகி கொண்டு உள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன? யார் வழங்குவார்? சோஷியல் மீடியாவில் ஹாஷ் டேக் போராட்டம் மட்டும் போதுமானதா? இல்லை தண்டனைகள் என்ற பேரில் நடந்த படும் நாடகம் தான் போதுமா? திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை நிறுத்த முடியாது என்பதை போலவே தான்….. ஆண்கள் பெண்கள் மீது கொண்டுள்ள எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும், பெண் வெறும் உடல் அழகை கொண்டுள்ள பொம்மை என்ற எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும், உணர்வுகள் நிறைந்த உயிர் உள்ள தன்னை போன்ற இனொரு ஜீவன் தான் என்ற எண்ணம் உருவாக வேண்டும்,உடலால் மட்டுமல்ல சிலர் வார்தைகளாலேயே பெண்களை துன்புறுத்துவது,பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்வது என்று இருக்கிறார்கள் அதுவும் தவறே என்று உணர வேண்டும்! ஒவ்வொரு வீட்டிலும் வளரும் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளின் உணர்வுகளை உணர்த்தி வளர்க்க வேண்டும்.. பெண் பிள்ளைகளுக்கு ஆண்களிடம் எவ்வாறு பழக வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளருங்கள். ஆண்-பெண் சமத்துவம் அதில் தான் உள்ளது. சொத்தில் உரிமை தந்த சமூகமே நாங்கள் உயிர் வாழும் உரிமையை பெற்று தந்தாலே போதும் நாங்கள் மகிழ்வோம்!!! என்று தீரும் எங்கள் சோகம் என் இனிய சமூகமே??
One thought on “என்று தீரும் எங்கள் சோகம்……”