Episode 4
மறுமணம் என்பது ஆணுக்கு மட்டுமே உகந்தது என்று நம்பும் சில ஜீவன்கள் இன்றும் வாழத்தான் செய்கிறது. ஊரார் எவ்வளவு சொல்லியும் மணி மறுமணம் செய்ய ஒத்துக் கொள்ளவே இல்லை. பார்வதியின் நினைவிலே தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
காற்றிலே கற்பூரம் கரைவது போல காலம் கரைந்து ஓடியது.சேகர், ராஜன், பூங்கொடி மூவரும் அன்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக வளர்ந்தனர். தந்தை சொல்ல மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து அப்பா எது சொன்னாலும் மறுக்காமல் கேட்டுக் கொள்ளும் பழக்கம் மூவருக்கும் இருந்தது. அதே போல் மணியும் தன் பிள்ளைகளின் விருப்புவெறுப்புகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல நடந்து கொள்ளவார். இன்று பல குடும்பத்தில் இல்லாத ஒரு விஷயம் இது தானே. பெற்றோர் பிள்ளைகளை புரிந்து கொள்வதில்லை,பிள்ளைகள் பெற்றோரை புரிந்து நடப்பதில்லை. ஆனால் மணி குடும்பம் இதற்கு விதிவிலக்கு. அம்மா இல்லை என்ற குறையை தவிர அந்த குடும்பத்தில் வேறு குறையே இல்லை. ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் அத்தியாவசியங்களை முழுமையாக பூர்த்தி செய்து நிம்மதியோடு வாழும் வாழ்க்கை இருந்தது. அது தானே முக்கியம்.
சிறு வயதில் இருந்தே ஓடுவதில் பூங்கொடிக்கு அதிக ஆர்வம். அவளது ஆர்வத்தை உணர்ந்த மணியும் அவரால் இயலுமான வகையில் அவளை ஊக்குவிக்க தவறவில்லை. அதே போல சேகர் ராஜன் இருவருமே தங்கள் தங்கைக்கு பக்கபலமாக இருந்தார்கள். பருவம் எய்த பிறகும் கூட அவளது ஓடும் ஆர்வத்தை அவர்கள் யாரும் தடுக்கவில்லை.பொதுவாகவே பெண்கள் பருவம் எய்த பின் மாமியார் வீட்டுக்கு போனால் என செய்ய வேண்டும் என்பதையே போதிப்பார்கள் வீட்டில், எப்போவோ வரும் யுத்தத்திற்காக எப்போதுமே போர் பயிற்சி பெறுவது போல எல்லாம் இருக்கும். அது கிராமம்…இன்றும் அங்கே பெண்கள் விடயத்தில் சில பழைமையான எண்ணங்களில் மாற்றம் இல்லை. மணியின் உறவினர்களும் கிராமத்தில் இருந்த வேறு பலரும் பூங்கொடி ஓடுவதை விரும்பவில்லை. “பொம்பளபுள்ளைக்கு எதுக்கு இதெல்லாம்? ஒழுக வீட்டு வேலை எல்லாம் கத்துக்கிட்டு குடும்பத்தை பார்த்துக்க வேண்டியது தானே…இதெல்லாம் நல்லாவா இருக்கு…புகுந்தவீட்டுக்கு போய் ஓடிகிட்டா இருக்க போறா??” என மணியை கேள்வி கேட்டவர்கள் அதிகம்.
ஆனால் மணியோ இந்த விடயத்தில் உறுதியாக இருந்தார். “என் புள்ளைக்கு ஆர்வம் இருக்கு..நல்ல திறமையும் இருக்கு..அது ஓடுனா கண்டிப்பா ஜெயிச்சுருது…அப்படி திறமை இருக்க புள்ளைய அடுப்புக்குள்ள போட்டு பொசுக்க நான் விரும்பலை..ஆம்பளையோ பொம்பளையோ திறமை இருந்தா கண்டிப்பா சாதிக்க உதவனும்” என்று படித்த மேதையை போல பேசுவார் அந்த அற்புத அப்பா. மணியின் இந்த உறுதியான மன நிலையால் பாரிவேந்தன் கூட பூங்கொடியை ஆதரிக்க முன் வந்தார்.
தொடரும்…..