EPISODE 7
அந்த பார்வைகளால் பூங்கொடியின் இதயத்திற்குள் கேள்வி புயல் வீசியது.
ஏன் இப்படி பாக்குறாங்க? நாம என்ன தப்பு பண்ணிட்டோம்? ஒருவேளை அவங்கள மாதிரி உடுத்தி இருந்தாதான் ஓடலாமா? நம்ம ஊரு போட்டியில இப்படியே தானே ஓடினோம்..ஜெயிச்சோம்! பரவால்ல ஓடுறதுக்கு கால் தானே முக்கியம் காற்சட்டையா முக்கியம்..பார்த்துக்கலாம்
என்று அவளுக்குள் ஒரு விவாத போட்டியே நடத்தி முடித்து கொண்டாள். அந்த கேள்வி புயலால் அவளுக்குள் இருந்த நம்பிக்கை என்ற தீபத்தை அணைக்க முடியாமல் போனது.
100 m ஓட்ட போட்டியாளர்களுக்கான கடைசி அழைப்பு ஒலித்தது. தங்களுக்கான இலக்கமிடப்பட்ட ஓடுதளத்தில் மாணவிகள் வந்து நின்று கொண்டார்கள். ஓடுவதற்கான ஒலி எழுப்பட்டதும் துப்பாக்கியில் இருந்து சீறி பாயும் தோட்டாவை போல ஓடுகளத்தை அதகளப்படுத்தி பார்வையாளர்களை மட்டுமன்றி சக போட்டியாளர்களையும் வியக்க வைத்து போட்டியின் முடிவு புள்ளியை முதல் ஆளாக கடந்து ஏளனப் பார்வைகளை ஆச்சரிய பார்வைகளை மாற்றினாள் பூங்கொடி. பூஞ்சோலை கிராம பாடசாலையின் தலைமையாசிரியர் கண்ணீர் ததும்ப கைத்தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த உடன் வந்த ஏனைய மாணவர்கள் தங்கள் தோல்வியை கூட மறந்து விட்டு பூங்கொடியின் வெற்றியை கொண்டாடினார்கள்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பூங்கொடிக்கும் பதக்கமும் சான்றிதழும் இரண்டாவது மூன்றாவது இடத்தை பெற்ற மாணவிகளுக்கும் அவை வழங்கி வைக்கப்பட்டது. கண்ணில் மகிழ்ச்சியும் கையில் பதக்கத்தையும் ஏந்திக் கொண்டு தலைமையாசிரியரை நோக்கி வேகமாக வந்தாள் பூங்கொடி,ஆனால் பணத்தை வைத்தே திறமையை எடை போடும் மனித கூட்டத்தின் நடுவே தான் நடப்பதை உணராமல்…..
தொடரும்…..