சிக்கன் பிரியரா நீங்கள்? சிக்கனை கிச்சன் சிங்க்கில் கழுவி சமைக்கும் பழக்கம்தானே உண்டு உங்களிடமும்? அப்படி என்றால் ஒருவேளை உங்கள் கிச்சன் பயங்கர நோய்களின் வாசஸ்தலமாக மாறி போயிருக்கலாம். ஆமாம்! அந்த நோய்களுக்கு காரணமான கேம்பைலோ பக்டர் என்ற வில்லன் பாக்டீரியா உருவத்தில் உங்கள் கிச்சனுக்குள் வந்திருக்க கூடும். இந்த நோய் கிருமி மூலம் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, தீராத வலி என ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக அட்லாண்டாவில் உள்ள உலக தொற்றுநோய் தடுப்புக்கழகம் தெரிவிக்கிறது. அதுவும் வெயில் காலம் என்றால் இந்த கிருமிகளுக்கு கொண்டாட்டம்தான், அதிவேகமாக பரவி தன் வேலையை காட்டும்!
சாதாரணமாக வயிற்றுப்போக்கு என ஆரம்பித்து வயிற்றுவலி, இரத்தம் கலந்த சீதபேதி, வாந்தி, காய்ச்சல், கைகால் மூட்டுவலி என நீண்டு செல்லும் நோய் பட்டியலை இது உருவாக்கும். ஒருவேளை பாதிக்கப்பட்டவர் நீண்டநாள் நோய்வாய்பட்டவராகவோ, ஸ்ட்ரோய்ட் மருந்து எடுத்துக் கொள்பவராகவோ, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை வியாதி உள்ளவராகவோ, எய்ட்ஸ் நோய் போன்ற உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவராகவோ இருந்தால் அவரது இரத்தத்தில் பரவி எளிதில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக் கூடும்.
ஒரு புள்ளிவிபரப்படி அமெரிக்காவில் 40% வரையும், இங்கிலாந்தில் 50% வரையும், இந்தியாவில் மூன்றில் ஒரு பாகத்துக்கும் மேல் கோழி இறைச்சிகளில் இந்த நோய்த் தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் இந்த பாக்டீரியா பொதுவாக கோழி, ஆடு, மாடு இவற்றின் குடல்பகுதிகள், ஈரல், அதன் கழிவுகளில் இருக்கும். அவற்றை வெட்டும் போது மற்ற உடல் பாகங்களுக்கும் பரவுகிறது. பால் கறக்கும் மாட்டின் மடியில் புண் இருந்தாலோ,மண் அல்லது சாணக் கழிவுகள் அதன் மடி மேல் பட்டிருந்தாலோ கறக்கும் பாலிலும் இந்தக் கிருமி தொற்ற வாய்ப்பு உண்டு. ஆனால் பாலை நன்றாக காய்ச்சினால் கிருமி அழிந்து விடும்.பச்சை பாலை குடிப்பவருக்குள் இந்தக் கிருமி எளிதில் குடியேறி விடும்.
சாதாரணமாக நோய் கிருமிகள் மிக அதிக அளவில் இருந்தால்தான் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். ஆனால் கேம்பைலோ பக்டர் வெறும் 500 கிருமிகள் இருந்தாலே போதுமாம் அவை ஒவ்வொன்றுமே லட்சம் கிருமிக்கு சமம். அதாவது கோழியை வெட்டி கழுவும் ஒரே ஒரு சொட்டு நீர் பட்டாலே இந்த கிருமி பரவி நோயை ஏற்படுத்த ஆரம்பித்து விடும்.
மேலும் கழுவும் போது அந்த நீர் சமையலறை பாத்திரங்கள், சிங்க்கில் பட்டால் மற்ற பாத்திரங்கள் மட்டுமல்ல அந்த நீர் தெறித்த உங்கள் சமையலறை முழுவதும் உங்களுக்கு தெரியாமல் நோய் பரப்பும் ஆயுதமாக மாறிவிடும். அது மட்டுமல்ல உங்கள் உடை, கைகால் என நீர் தெறித்த இடம் எதுவாக இருந்தாலும் கிருமி பரவும் அபாயம் உண்டு. அதை தவிர்க்க அத்தனை பாத்திரங்களையும் சிங்க்கையும் சோப் கொண்டு நன்றாக ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும். கையையும் சோப் போட்டு வெதுவெதுப்பான நீரால் 2 நிமிடம் சுத்தம் செய்ய வேண்டும். இறைச்சியை மஞ்சள் தேய்த்து சுத்தம் செய்யும் போது கிருமி பரவும் வாய்ப்பு குறைகிறது என்றாலும் முற்றிலும் அழிவதில்லை. கோழியை நன்றாக வேக வைக்க வேண்டும். அரை வேக்காடு அதிக நோயை பரப்பும். பச்சை பால், பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு இந்த நோய் எளிதில் வந்துவிடும். பொதுவாக மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இது பரவாது.ஆனாலும் பாதிக்கப்பட்டவரின் மலத்தில் இருந்து இது பரவ கூடும். எனவே கைகளை சோப் போட்டு நன்றாக கழுவுவதன் மூலம் நோய் பரவுதலை தடுக்கலாம்.
இந்த கிருமி தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கு நீர் ஆகாரம், இளநீர், கஞ்சி, ஜூஸ், உப்பு-சர்க்கரைக் கரைசல் எனக் குடித்தாலே ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். மூன்று நாட்களுக்கு மேல் இருந்தாலோ, இரத்தம் கலந்த சீதபேதி, வயிற்று வலி, காய்ச்சல், கைகால் வீக்கம் மற்றும் வலி இருந்தாலோ கண்டிப்பாக கை மருத்துவம் செய்து கொண்டு வீட்டிலே இருக்காமல் உடனடியாக மருத்துவரை நாடுவதே சிறந்தது.
எளிதாக எப்படி தடுக்கலாம்?
சிக்கனை சமையலறையில் இருக்கும் சிங்க்கில் வைத்து கழுவாதீர்கள். கழுவும் போது கையுறை போடுவது சாத்தியமென்றால் சிறந்தது. சிக்கனை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியின் மேல்தட்டில் தனியாக வையுங்கள். இதன் மூலம் அதிலிருந்து மற்ற பொருட்களுக்கு கிருமி பரவுவதை தடுக்கலாம். மேலும் குளிர்சாதன பெட்டியில் சமைத்த பொருட்களையும் சமைக்காத பொருட்களையும் ஒன்றாக வைப்பதால் சமைக்காத பொருளில் இருக்கும் கிருமி சமைத்த பொருட்களுக்கு பரவும் அபாயம் இருக்கும். எனவே சமைத்த பொருட்களை மேல் அடுக்கிலும் சமைக்காத பொருட்களை சுத்தப்படுத்தி கழுவி கீழ் அடுக்கில் பொலிதீன் அல்லது பாத்திரங்களில் போட்டு மூடி வைப்பதன் மூலம் கிருமி பரவுதலை தடுக்கலாம்.
அனைத்து இறைச்சி வகைகள் மற்றும் முட்டை ஆகியவற்றை மிக நன்றாக வெந்த பின் உண்பதுதான் சிறந்தது.
வரும் முன் காப்பது எப்போதும் நல்லது அத்துடன் செலவும் குறைவு!….