அக்டோபர் 16 உலக உணவு தினம்
ஏன் வாழுறீங்க ? உங்க வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் போது நம்மகிட்ட இருந்து வரும் பதில் ரொம்ப ஆக்கபூர்வமாக இருக்கும். நான் சாதிக்கனும்…நான் என் லட்சியத்துக்காக வாழுறேன்..நான் ஒரு குறிக்கோளோடு வாழுறேன்…இப்படித்தானே கண்டிப்பா சொல்லுவோம். அதே மாதிரி எதுக்காக உழைக்கிறோம் என்ற கேள்விக்கு பதிலாக நல்ல தரமான வாழ்க்கையை வாழ..வாழ்வில் முன்னேற இப்படியான பதில் தான் வரும். ஆனால் உண்மை என்னவென்றால் சாப்பிடத்தான் வாழுறோம். நீங்க நம்பலைனாலும் அதுதான் நெசம்!!.
ஒரே வரியில் சொல்லப்போனா கொரோனா லாக் டவுண்க்கு முன்பும் சரி லாக் டவுன் திறக்கப்படும் நாட்களில் கூட்டம் கூட்டமாக இல்ல இல்லை வரிசை வரிசையாக உணவு பொருட்களை வாங்கதானே கால்கடுக்க நின்றோம். அரசாங்கத்தோட சுகாதார விதிமுறைகளை கூட கவனிக்காம முட்டி மோதி கையில் இருக்க காசுல வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி குவித்துதானே வைத்தோம். அப்போ சோறு தானே முக்கியம் நமக்கு..இன்னும் விரிவா சொல்லப்போனால் இருக்க வீடு இல்லாமல், போட்டுக்க நல்ல துணிமணி இல்லாமல்..கையில காசு இல்லாமல் தெருவோரங்களிலும் கோவில் வாசல்களிலும் இருக்கும் யாசகர்கள் கூட சாப்பிட்டு 2 நாள் ஆகுது 3 நாள் ஆகுது…சாப்பிட எதாவது வாங்கி தாங்க..சாப்பிட காசு தாங்க..என்று தானே அதிகமாக கேட்பாங்க…யாருமே துணி வாங்கி கொடுங்க…தங்க இடம் தாங்க என்று கேக்க மாட்டார்களே! உணவையோ உணவுக்கான பணத்தையோ தானே கேட்பாங்க…
அவ்வளவு ஏன் நண்பர்களே பசி நேரத்துல இல்லனா எப்போவுமே சாப்பிடும் நேரம் ஒரு நாள் தவறி போனால் கூட நம்ம எப்படி நடந்துப்போம்..அதுவும் நம்மில் பலரும் அதிக பசியில் சொல்லும் ஒரு வசனம் இருக்கிறது…’பசில உயிர் போகுது..!’. ஆனால் நம்ம யாருமே வேறு எந்த பொருள் கிடைக்காமல் போகும் போது இப்படி சொல்வது இல்லை. கிடைக்காத பொருளுக்காக மன வருத்தம் இருக்குமே தவிர, அந்த பொருள் கிடைக்காததால் உயிர் போவதாக சொல்ல மாட்டோம். மனிதனின் அடிப்படை தேவைகள் உடை,உணவு,உறையுள் என்று தான் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உணவு,உடை,உறையுள் என்று தான் நாம் வாழ்கிறோம்..அரைகுறையான ஆடை கூட அணிந்து தெருவில் செல்கிறார்கள் ஆனால் பசியை பொறுத்துக்கொள்ள யாரும் தயாராக இல்லையே…ஆக சோறு தானே முக்கியம்!
இந்த ஒரு ஜான் வயிற்று பசிக்காக தானே ஓடி ஓடி உழைத்து மாள்கிறோம். இப்போதெல்லாம் பிறந்தநாள் வரும் போது எதாவது சிறுவர்கள் காப்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கோ அல்லது முதியோர் இல்லத்தில் இருக்கும் பெரியவர்களுக்கோ ஒரு வேளை உணவை வழங்கி அவர்களோடு பிறந்தநாளை கொண்டாடும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. உண்மையாக எவ்வளவு பாராட்ட வேண்டிய விஷயம் அது…அதை ஏன் செய்கிறோம் நண்பர்களே? எதை கொடுத்தாலும் திருப்தி கொள்ளாத மனித மனம் போதும் என்று சொல்லும் ஒரே விஷயம் உணவு..அதில் மட்டுமே திருப்தி அடைய முடியும் மனிதனால்…வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு மனம் முகம் மலர உங்களை அவர்கள் வாழ்த்தும் போது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிக்கே அந்த புண்ணியம் வந்து சேரும்..அந்த மகிழ்ச்சிக்கு உலகில் எந்த பொன்னும் பொருளும் ஈடு இணை இல்லை என்பதே உண்மை. இது தெரிந்து சிலரும், அவங்க செய்றாங்க என்பதை பார்த்து சோஷியல் மீடியா லைக்ஸ் விரும்பிகளும் செய்வதும் வழக்கமாகியுள்ளது.
ஒரு உண்மையாக சொல்ல போனால் நமக்கு மூணு வேளை சாப்பாடும் கிடைக்குது..இதுக்கு நடுவில் ஸ்னாக்ஸ் வேறு! அப்படி பார்த்தால் இப்போ இந்த பிறவிக்காக இந்த நாட்டிலே பிறந்ததுக்காக நம்ம சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டும் கண்டிப்பாக. ஆன்லைனில் உணவை ஓர்டர் செய்து விட்டு கொஞ்சம் தாமதமாக வந்தாலும் அந்த டெலிவரி பையன் காது ஜவ்வுகள் கிழிந்து போக வரைக்கும் பேசிருவோம், அதோடு விட்டுருவோமா…ரேட்டிங் என்ற பேரில் எல்லா குறைகளையும் கூறி அவன் பொழப்பே கெடுத்துருவோமே….வீட்டில் கூட சமைக்க லேட்…எவ்வளவு சச்சரவுகள் குடும்பத்தில்… எத்யோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பிறந்திருக்கும் மனித உயிர்களை கொஞ்சம் யோசித்து பாருங்க நண்பர்களே! ஒரு நேர உணவுக்காக ஏங்கி தவிக்கும் அந்த மக்கள்….தன் கண் முன்னாடியே சக மனித உயிர் பசியில் மடிந்து போகும் அவல நிலை…நினைக்கும் போதே கண் கலங்கும். இப்போ அதுக்காக இங்க இருக்க நம்ம என பண்ண முடியும் அப்படினு நீங்க கண்டிப்பா கேட்பீங்க!! அவங்க நாட்டுல மட்டுமே..நம் நாடுகளில்..ஊர்களில்…ஏன் நமக்கு அடுத்த வீட்டில் கூட சரியான நேரத்து ஒரு பிடி உணவுக்காக ஏங்கும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
தினமும் நம் வீடுகளில் எவ்வளவு உணவு குப்பையில் கொட்டப்படுகிறது….கல்யாண வீடு, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் தட்டு நிறைய அங்கு வைத்திருக்கும் எல்லா உணவு பண்டங்களையும் நிரப்பி அதில் பாதியை கூட சாப்பிடாமல் வீணாக குப்பையில் கொட்டும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது…
நம் பசி தீர்ந்த பின் நாம் தட்டில் வைத்துக் கொள்ளும் ஒவ்வொரு இட்லியும் வேறொருவருக்கானது என்பது தான் கம்யூனிசம் என்று தளபதி விஜய் அவர்கள் கத்தி படத்தில் சொல்லி இருப்பார்….அதுதான் உண்மை…தட்டில் நிரப்பி உண்ணாமல் கொட்டப்படும் ஒவ்வொரு பருக்கையையும் வேற ஒருவரின் வாய்க்குள் போக விடாமல் நாம் தான் தடுத்து உள்ளோம்.
அது மட்டும் இல்லை விதைக்கும் விவசாயியே நேரத்துக்கு உண்ண உணவு இல்லாமல்…சரியான முறையில் தன் வாழ்க்கையை கொண்டு போக முடியாமல் தடுமாறும் போதும் மூன்று வேளையும் எந்த குறைவும் இல்லாமல் வாய்க்கு ருசியாக..வயிற்றுக்கு நிறைவாக நமக்கு சாப்பாடு கிடைக்குதே..அதை எண்ணி சந்தோசப்பட்டுப்போம். அதோட நிறுத்திக்காம முடிஞ்சளவு உணவை வீணடிக்காம, நம்ம வயிற்றுக்கு தேவையான அளவு சாப்பிட்டு விட்டு, உணவுக்காக கஷ்டப்படுற யாரோ ஒருவருக்கு ஒரு நேர உணவையாவது கொடுத்து அவர்கள் பசியை போக்கி மகிழ்ச்சிபடுத்த முயற்சிப்போம் நண்பர்களே!!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!!